கஞ்சா புகைப்பது போல் ரீல்ஸ்... இளைஞர்களைத் தட்டித்தூக்கிய போலீஸார்!

By KU BUREAU

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். இதனிடையே பழனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பணிகளுக்கு செல்வோர் மட்டுமின்றி, இளைஞர்கள் பலரும் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்நிலையில் பழனி அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில், 8 இளைஞர்கள் கஞ்சா புகைத்து விட்டு, மயங்கி விழுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அந்த இளைஞர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சிவகுமார், மகாபிரபு, கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 பேரை பழனி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா, அதனை புகைக்கப் பயன்படுத்திய பாங் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து, 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டன், மதி ஆகிய இளைஞர்கள் மற்றும், கஞ்சா விற்பனை செய்த பாஸ்கர், முத்துராஜா ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE