திடீரென வெடித்துச் சிதறிய டிரான்ஸ்பார்மர்... கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

By KU BUREAU

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு டிரான்ஸ்பார்மர் ஒன்று மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த சாலையில் இன்று அதிகாலை பொதுமக்கள் வழக்கம் போல் பேருந்துகளுக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. அருகில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்சார வாரியத்தினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் ஏற்பட்ட தீ காரணமாக அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை, போக்குவரத்து போலீஸார் வைத்திருந்த டிவைடர்கள், அருகாமையில் இருந்த இருசக்கர வாகனம் ஒன்று, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி உள்ளிட்டவை தீயில் கருகி சேதமானது.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், டிரான்ஸ்பார்மரை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டதின் காரணமாகவே இந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி இருப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்று நீண்டகாலமாக பராமரிக்கப்படாத டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE