குழந்தைகள் முன்பு செய்யக்கூடாததைச் செய்த நடிகர்: போக்சோ சட்டத்தில் கைது!

By காமதேனு

மலையாளத்தில் பிரபல வில்லன் நடிகரான ஸ்ரீஜித் ரவி போக்சோ சட்டத்தின் கீழ் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். குழந்தைகளின் முன்பு நிர்வாணமாக நின்றதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் எஸ்.என்.பார்க் உள்ளது. இந்த பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகள் முன்பு காரில் வந்த ஒருவர் நிர்வாணமாக நின்றார். அந்தக் குழந்தைகளுக்கு அவர் யார் எனத் தெரியவில்லை. இதைப் பார்த்து அவர்கள் மிரண்டனர். இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தனர். போலீஸார் அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதலில் கார் எண்ணைக் கண்டுபிடித்தனர்.

அப்போதுதான் அது பிரபல மலையாள வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவியின் கார் என்பதும், பூங்காவில் குழந்தைகளின் முன்பு நிர்வாணமாக நின்றது அவர்தான் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜித் ரவியை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். ஆனால் ஸ்ரீஜித் ரவி தரப்பில் அவருக்கு சமீபகாலமாக மனநல பாதிப்பு இருந்ததாகவும், அதற்கு மருந்து எடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு பாலக்காடு பகுதியில் பள்ளிக்குச் சென்ற சிறார்கள் முன்பு தன்னை நிர்வாணமாகக் காட்டியதோடு, அப்படியே அவர்களோடு புகைப்படமும் எடுக்க முயன்றாக ஸ்ரீஜித் ரவி கைதாகி வெளியில் வந்தவர் ஆவார். இவர் தமிழிலும் 'கும்கி', 'மதயானைக் கூட்டம்' உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE