சென்னை: நாடு முழுவதும் அண்மைக் காலமாக ரயில் நிலையங்கள், கல்விநிறுவனங்கள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து இதுபோன்ற மிரட்டல்கள் இ-மெயில் வாயிலாக அவ்வப்போது அனுப்பப்படுவதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இதுபோன்ற மிரட்டல் விடும் ஆசாமிகளை சர்வதேச போலீஸ் உதவியோடு, சென்னை தெற்கு காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான தனிப்படை போலீஸார் துப்பு துலக்கிவருகின்றனர்.
இந்நிலையில், டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில்,``பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். சற்று நேரத்தில் அது வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்'' என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
உடனடியாக போலீஸார் பரங்கிமலை காவல் மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் பிரிவினர் மூலம் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. ரயில்நிலையத்துக்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
» கோயம்பேட்டில் தீப்பற்றி எரிந்த 12 வாகனங்கள்: தீ வைத்ததாக தொழிலாளி கைது
» விக்கிரவாண்டி தேர்தலை பொறுத்தவரை அதிமுக, பாமகவின் நோக்கம் ஒன்றுதான்: ராமதாஸ்
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் வெடிபொருட்களோ, சந்தேகத்துக்கிடமான பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் புரளியைக் கிளப்பும் வகையில் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.