சென்னை: கோயம்பேடு சந்தை அருகில் உள்ள தனியார் வாகன நிறுத்தத்தில், நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த 9 ஆட்டோ, ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து தீ பரவியது.
தகவல் அறிந்து வந்த கோயம்பேட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ஆம்னி பேருந்து உட்பட 12 வாகனங்கள் தீயில் எரிந்து கருகின. கோயம்பேடு போலீஸார் விசாரித்தனர்.
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆம்னி பேருந்தில் ஒருவர் ஏறிச் சென்று தீ வைப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. விசாரணையில் அந்த நபர், அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து(45) என தெரியவந்தது.
புகைபிடித்தபோது குப்பையில் தீப்பற்றி வாகனங்கள் எரிந்ததாக போலீஸ் விசாரணையின்போது தெரிவித்தார். ஆனால், அவர் வேண்டும் என்றே தீ வைத்ததுபோல் உள்ளதாக கூறி, போலீஸார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
» விக்கிரவாண்டி தேர்தலை பொறுத்தவரை அதிமுக, பாமகவின் நோக்கம் ஒன்றுதான்: ராமதாஸ்
» கஞ்சா, லாட்டரி விற்பனையை கண்டித்ததால் விபரீதம்; சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை: 7 பேர் கைது