கஞ்சா, லாட்டரி விற்பனையை கண்டித்ததால் விபரீதம்; சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை: 7 பேர் கைது

By KU BUREAU

சேலம்: சேலத்தில் அதிமுக பகுதி செயலாளரும், மாநகராட்சி முன்னாள் மண்டலக் குழுத் தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

சேலம் தாதகாப்பட்டி தாகூர்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(62). கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளரான இவர், மாநகராட்சி முன்னாள் மண்டலக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டார். சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் சென்றபோது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் சண்முகத்தைசரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியது.

தகவலறிந்த போலீஸார் மற்றும் சண்முகம் மனைவி பரமேஸ்வரி, உறவினர்கள், அதிமுக நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாநகர காவல்துணை ஆணையர் மதிவாணன்தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சண்முகம் உடலை மீட்டபோலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, காவல் ஆணையர் விஜயகுமாரி உத்தரவின் பேரில்,5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கொலையான சண்முகம், கஞ்சா விற்பனையாளர்கள் மற்றும் ஒரு நம்பர், மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்பவர்களைக் கண்டித்து வந்துள்ளார். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் வலியுறுத்திஉள்ளார்.

கஞ்சா, லாட்டரி விற்பனைக்கு இடையூறாக இருந்ததால், சண்முகத்தை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்றகோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திட்டமிட்டு கொலை: கொலை செய்யப்பட்ட சண்முகத்தை மர்ம நபர்கள், பல நாட்களாக நோட்டமிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த 2 தெருவிளக்குகளையும், தெரு ஆரம்பிக்கும் இடம், முடியும் இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். சண்முகத்தை தலையில் வெட்டியும், முகத்தை சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்

பழனிசாமி கண்டனம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “சண்முகத்தின் படுகொலை கண்டனத்துக்குரியது. அவரது இழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகத்தின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, வி.கே.சசிகலாவும், சண்முகத்தின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE