சிறைக்குள் வெடித்த பயங்கர கலவரம்....தப்பிக்க முயன்ற 49 கைதிகள் மரணம்!

By காமதேனு

கொலம்பியாவில் தென்மேற்கு பகுதியான துலுவாவில் உள்ள சிறையிலிருந்து தப்பிச் செல்லும் முயற்சியின் போது இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 49 கைதிகள் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பேசிய அந்நாட்டின் தேசிய சிறைச்சாலை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டிடோ கேஸ்ட்டல்லானஸ் , "துலுவா நகரத்தின் சிறையில் நடந்த கலவரத்தில் இதுவரை 49 பேர் இறந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவராததால் இந்த இறப்பு எண்ணிக்கை அதிகமாகலாம் " என்று கூறினார்.

சிறையிலிருந்து தப்பிக்க அதிகாலையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து சிறைக்குள் தீ வைக்கப்பட்டதனால் ஏற்பட்ட மோதல்களில் இந்த சோகம் நிகழ்ந்ததாக துலுவா சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறைச்சாலையில் மொத்தம் 1,267 கைதிகள் உள்ளனர், தீ விபத்து நடந்த சிறைப்பகுதியில் மட்டும் 180 கைதிகள் இருந்தனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறைகளில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலம்பியா நாட்டில் மட்டும் 97,000 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், பதவி விலகவுள்ள கொலம்பிய அதிபர் இவான் டியூக், "துலுவா, வாலே டெல் காக்கா சிறையில் நடந்த சம்பவங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த பயங்கரமான சூழ்நிலையில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு துணையாக நிற்போம்" என தெரிவித்துள்ளார். ஆனால் இவர் சிறையில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை வழங்கவில்லை.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொடிய சிறைக் கலவரங்கள் அடிக்கடி நடக்கின்றன. கொலம்பியாவின் அண்டை நாடான ஈக்வடாரில், 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடந்த ஆறு சிறைக் கலவரங்களில் கலவரங்களில் இதுவரை கிட்டத்தட்ட 400 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE