பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தந்தரி பாலத்தின் கீழ் உள்ள குடிசைப்பகுதி குடியிருப்பில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பியவரை பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆத்திரத்தில் அடித்து கொன்றுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியான டினு மேத்தாவின் மைத்துனிக்கு பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியில் அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்கவிட்டு அவர்கள் கொண்டாடியுள்ளனர். இதனால் எரிச்சல் அடைந்த பக்கத்து வீட்டுக்காரரரான மெஹத் லால் மற்றும் அவரது மகன்கள் பாடலை நிறுத்த சொன்னபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மெஹத் லால் மற்றும் அவரது 4 மகன்கள், டினு மற்றும் அவரது குடும்பத்தினரை கம்பு மற்றும் செங்கற்களால் கொடூரமாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் டினு மேத்தா (35) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கர்ப்பிணி மனைவி நகினா (32), மாமனார் லாலு (60), மைத்துனர் சேதேவ், மாமியார் ரைமூன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மெஹத் லால் மற்றும் அவரது நான்கு மகன்கள் சஞ்சய், ஷியாம் குமார், சிபாஹி லால் மற்றும் ராஜன் ஆகிய 5 பேர் மீது சாஹ்னேவால் காவல் நிலைய போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
உயிரிழந்த டினு மேத்தாவுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அதிக சத்தத்துடன் பாடல் ஒலிக்கவிட்டதால் ஒரு உயிரே பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.