கும்பகோணம்: பாபநாசம் வட்டம், ஈச்சங்குடியில் உள்ள வேத பாடசாலையில் 1 கிலோ வெள்ளிப் பொருட்களை இன்று அதிகாலை முகமூடி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருடுவதற்கு முன்னதாக சுவாமி கும்பிட்டு விட்டுத் திருடிய அந்தத் திருடர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈச்சங்குடி, அக்ரஹாரத்தில் காஞ்சி பெரியவரின் தாயார் பிறந்த வீட்டில் மகாலட்சுமி வேத பாடசாலை இயங்கி வருகிறது. இந்த மடத்தின் மேலாளராகத் திருவையாறு, புஷ்ப மண்டபத் தெருவைச் சேர்ந்த ரகுநாதா மகன் நடராஜன் (48) பணியாற்றி வருகிறார். கரோனா தொற்று காலத்திற்கு பிறகு, இங்கு யாரும் அதிக அளவில் வருவதில்லை. இருந்தபோதும் காலையும், மாலையும் இந்த வேத பாடசாலையில் பூஜைகள் நடப்பது வழக்கம். பூஜைகள் முடிந்தவுடன் வேத பாடசாலையை, அங்கு பணியாற்றுபவர்கள், வழக்கம்போல் பூட்டிவிட்டுச் சென்று விடுவார்கள்.
இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி இரவு வழக்கம் போல், பணியாளர்கள் வேத பாடசாலையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 3-ம் தேதி காலை, மேலாளர் நடராஜன், வேத பாடசாலைக்கு வந்த போது, பாடசாலையின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 50 கிராம் எடை கொண்ட வெள்ளியிலான வில்வ மாலை, 500 கிராம் எடைகொண்ட வெள்ளியிலான சொம்பு, 500 எடை கொண்ட வெள்ளி வேல் என மொத்தம் 1,050 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிய வந்தது.
» கள்ளச்சாராயம், போலி மது தயாரித்து விற்ற 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
» முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.94 ஆயிரம் திருட்டு @ விருகம்பாக்கம்
இதையடுத்து, நடராஜன், கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், ஜிபிஎஸ் மூலம் செல்போன் எண்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் மர்ம நபர்களைத் தேடி வெளி மாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், வேதபாடசாலைக்குள் கடந்த 3-ம் தேதி அதிகாலையில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் பேன்ட் சட்டையும், மற்றொருவர் வேட்டியை தலையுடன் போர்த்திக் கொண்டு, முகத்தில் முகமுடி அணிந்தபடியும் வந்துள்ளார். முன்னதாக, வேட்டியால் போர்த்தியவர், அங்கிருந்த சுவாமியை கைகளைக் கூப்பி வணங்கிவிட்டு, திருட்டில் ஈடுபட்டுள்ளார். இரண்டு பேருமே சாலை வழியாக வராமல் பின்பக்க வயல்கள் வழியாக வந்ததால் அவர்கள் எப்படி வந்தார்கள் எப்படி வெளியேறிச் சென்றார்கள் எனத் தெளிவாகத் தெரியவில்லை'' என்றனர்.