பெண்ணை வெட்டிக்கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்: கள்ளக் காதலன் கைது

By காமதேனு

திண்டுக்கல்லில் பெண்ணை வெட்டிக் கொன்று, உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூர கள்ளக் காதலனை போலீஸார் கைதுசெய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகில் உள்ள பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் கௌசிக் பாண்டி. கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பாண்டீஸ்வரி(30) என்ற பெண்ணுக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இந்தப் பழக்கம், முறைதவறிய காதலாக மாறியது. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்துவந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு கௌசிக் பாண்டிக்கும், பாண்டீஸ்வரிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த கௌசிக் பாண்டி, அரிவாளால் பாண்டீஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாண்டீஸ்வரி உயிரிழந்தார். இதனிடையே சந்தேகத்திற்கிடமான முறையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சுற்றிவந்த கௌசிக் பாண்டியை போலீஸார் பிடித்து விசாரித்தபோது, அவர் கொலை செய்துவிட்டு சுற்றிவந்தது தெரிய வந்தது.

போலீஸார் கௌசிக் பாண்டியிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பாண்டீஸ்வரியைக் கொலை செய்து, உடலை சாக்கில் கட்டி அப்பகுதியில் தூக்கி வீசியது தெரிய வந்தது. தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE