இந்து மதம் குறித்து அவதூறு பேச்சு: பாதிரியார் உள்பட 2 பேர் மீது கோவை போலீஸ் வழக்குப் பதிவு

By டி.ஜி.ரகுபதி

கோவை: இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக பாதிரியார் உள்ளிட்ட இருவர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தில், கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு நிகழ்வு நடந்தது. இதில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பங்கேற்று பேசினார். அப்போது, ''உனக்கு என்ன தெரியும்... கொழுக்கட்டையும், தேங்காய் மூடியும் சாப்பிட்டுட்டு திரியுற நீ, மாட்டு மூத்திரத்தையும் குடிச்சுட்டு திரியுறே...” என்று தொடங்கி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரது பேச்சு அவரது முகநூல் பக்கத்திலும் ஒளிபரப்பானதை அடுத்து இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசியதற்கு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ஆ.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று (ஜூலை 2) இரவு ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தனர்.

இந்து மதத்தை தரம் தாழ்த்தி விமர்ச்சித்து, மோதலை தூண்டுவது போல் பேசிய பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தங்களது புகாரில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, உதவி ஆய்வாளர் பிரியங்கா ரேஸ்கோர்ஸ் போலீஸில் நேற்று (ஜூலை 2) இரவு புகார் அளித்தார். அதில், 'சிஎஸ்ஐ இமானுவேல் சர்ச் கோவை என்ற முகநூல் பக்கத்தில் இரு மதங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என் தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீஸார், பாதிரியார் பிரின்ஸ் கால்வின், தேவாலய நிர்வாகி உள்ளிட்ட இருவர் மீது இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல், மத நம்பிக்கையை அவமதித்தல், பொது அமைதியை சீர்குலைத்தல், பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE