`வழக்கு முடிந்துவிட்டது, ஊருக்கு வாங்க'- பெண் மருத்துவர் கொலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி

By ரஜினி

ஆதாய கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கு முடிந்து விட்டதாக நினைத்து கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய போது காவல்துறையினரிடம் அவர் சிக்கிக் கொண்டார்.

சென்னை தியாகராய நகர் ராகவைய்யா சாலையில் வசித்து வந்த சித்த மருத்துவர் மலர்கொடி (67) கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலையான மலர்கொடி வீட்டில் இருந்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து கொலையுண்ட மலர்கொடியின் சகோதரர் சித்த மருத்துவர் ஆனந்த குமார் (70) இது குறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாண்டி பஜார் காவல்துறையினர் ஆதாய கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சித்த மருத்துவர் மலர்கொடி வீட்டில் வேலை செய்து வந்த அழகர்சாமி தனது சகோதரர் ராமகிருஷ்ணன் மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து மலர்கொடியை கொலை செய்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

பின்னர் ஆதாயக் கொலையில் ஈடுபட்ட அழகர்சாமி (22), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (24) ஆகியோரை கடந்த 2002-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ராமகிருஷ்ணன் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், குற்றவாளி ராமகிருஷ்ணன் திண்டுக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாண்டி பஜார் காவல்துறையினர் திண்டுக்கல் விரைந்து சென்று 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணன் (42)என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கேரளாவில் பதுங்கி ஹோட்டலில் வேலை பார்த்து வந்ததும், செல்போனை பயன்படுத்தினால் பிடித்து விடுவார்கள் என நினைத்து பயன்படுத்தாமல் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் கொலை நடந்து 20 வருடங்கள் ஆன நிலையில் கொலை வழக்கு முடிந்துவிட்டதாக கிடைத்த தகவலின் பேரில் ராமகிருஷ்ணன் சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியதாகவும், அப்போது காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணனை காவல்துறையின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE