பாலியல் அத்துமீறலை எதிர்க்கப் போராடிய பெண்ணின் முகத்தில் 118 தையல்கள்: முதல்வர் ஆறுதல்

By காமதேனு

மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் பாலியல் அத்துமீறலை எதிர்க்க முயன்ற பெண்ணை குற்றவாளிகள் தாக்கியதில், அவர் முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், அப்பெண்ணைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான்.

போபாலின் டிடி நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அந்தப் பெண் தனது கணவருடன் சென்றபோது, ​​வாகன பார்க்கிங் தொடர்பாக அவர்களுக்கும் அங்கு வந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஆபாசமான வார்த்தைகளைப் பேசி, அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்ய முயன்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த அப்பெண் அவர்களில் ஒருவரை அறைந்தார்.

உடனே அந்த நபர்கள், பேப்பர் கட்டர் மூலம் அவரின் முகத்தில் கடுமையாகத் தாக்கினர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட இருவரை கைது செய்தனர், மூன்றாவது நபரைப் பிடிக்க தேடுதல் பணிகள் நடந்துவருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

துணிச்சலுடன் போராடிய இப்பெண்ணின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் இன்று காலை பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு உதவி செய்வதாக உறுதியளித்தார், அவரின் துணிச்சலைப் பாராட்டி அவருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கினார். மேலும், "குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் உறுதியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE