ஆட்சியர்கள் பெயரில் ஆட்டம் காட்டும் வட இந்திய கும்பல்: முடிவுக்கு வருமா புதுவித மோசடி?

By என்.சுவாமிநாதன்

வாட்ஸ் -அப்பில் மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி ராஜஸ்தான் கும்பல் பணம் பறிக்கும் செயல் தற்போது அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம், ‘ஏடிஎம் கார்டு மேலே இருக்குற 16 டிஜிட் நம்பரைச் சொல்லு சாரே’ என திக்கித் திணறி தமிழில் பேசி பணம் பறித்த இந்தக் கும்பல் இப்போது, ஆட்சியர்களின் பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தி உயரதிகாரிகளிடமே பணம் பறித்துவருவது தமிழகக் காவல் துறைக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

தேனி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களின் புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து நேற்று இரவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் பல ஆட்சியர்களின் பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறியுள்ளது. ஆனால் அனைத்து ஆட்சியர்களின் பெயரிலும் ஒரேபோன்றே மோசடி அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவின் புகைப்படத்துடன் கூடிய ஒரு வாட்ஸ் -அப் எண்ணில் இருந்து, சக ஊழியர்களுக்கு அமேசான் பரிசுக்கூப்பன் என ஒரு செய்தி சென்றது. அதைப் பார்த்ததும், ஆட்சியரே அனுப்பியிருப்பதாக நினைத்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் க்ளிக் செய்தனர். அந்த லிங்க் பணம் செலுத்த வழிகாட்டியது. அதை நம்பி அவர்கள் பணம் செலுத்தி ஏமாந்தனர். சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் மகாராஷ்டிர மாநிலத்தைச சேர்ந்த ஆகாஷ் என்பவர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதே பாணியில் திருவாரூர், திருப்பூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், வாட்ஸ்-அப் வழியாக உயரதிகாரிகளை ஏமாற்றியுள்ளனர். அந்தந்தஆட்சியர்கள் கொடுத்த புகாரின்பேரிலும் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றார்.

இந்த சங்கிலித்தொடர் செயல் குறித்து, சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டபோது, “பொதுமக்களிடம் ஏடிஎம் கார்டு நம்பரைக் கேட்கும் மோசடி பாணியைக் கொள்ளையர்கள் இப்போது மூட்டை கட்டி வைத்துவிட்டனர். சமீபகாலமாக சமூகவலைதளங்களின் மூலம் மோசடியை அரங்கேற்றத் தொடங்கிவிட்டனர். ஃபேஸ்புக்கில் ஒருவரது புகைப்படங்களை டவுன்லோடு செய்து அதே பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து, அவருடைய நண்பர்களிடம் பணம் கேட்டு ஏமாற்றுவதையும் செய்தனர். அதுகுறித்தும் சைபர் க்ரைம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இப்போது வாட்ஸ்-அப் பக்கம் வந்துவிட்டனர். அதிலும் ஆட்சியர் புகைப்படங்களை ப்ரொஃபைல் படமாக வைத்திருந்து அதைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். அரசு அதிகாரிகள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதேநேரத்தில் ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்த கும்பலே இந்த மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் கண்டுபிடித்துள்ளோம். விரைவில் குற்றவாளிகளை நெருங்கிவிடுவோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE