நிர்வாணமாக வீடியோ கால்... மாணவிக்கு பாலியல் டார்ச்சர்: போராட்டத்தால் கைதான கல்லூரி சேர்மன்

By மு.அஹமது அலி

கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு அக் கல்லூரியின் சேர்மன் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி என்ற பெயரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் சேர்மனான டாஸ்வின் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும் அவரிடம் வீடியோ காலில் தவறான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பிற மாணவிகளிடம் கூறவே இன்று கல்லூரியின் முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதான டாஸ்வின்

"டாஸ்வின் ஜான் கிரேஸ், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி தனியாக அழைத்து பாலியல் ரீதியாக பேசுவது, தவறாக நடந்து கொள்வது போன்ற செயல்களை செய்துள்ளார். அந்த பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசுவதும், மற்ற பெண்களையும் இவ்வாறு நடந்து கொள்ள வழிவகுத்து உள்ளார். இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது. டாஸ்வின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நாங்கள் படிப்பது தனியார் கல்லூரி என்பதால் எங்கள் படிப்புக்கு என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. கல்லூரியை மூடி விட்டால் எங்கள் படிப்பு கேள்விக்குறியாக மாறிவிடும். இங்கு தவறு நடந்துள்ளதால் தொடர்ந்து படிக்க பயமாக இருக்கிறது. ஆகையால், படிப்பை நிறுத்தாமல் மாற்று கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி செய்யுங்கள் ” எனக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன், தாசில்தார் அறிவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்த போதிலும் மாணவிகள் கலைந்து செல்லாமல் டாஸ்வினை உடனடியாக அழைத்து வந்து எங்கள் முன்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து, கல்லூரி மாணவிகளின் போராட்டத்தின் விளைவாக டாஸ்வின் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE