15-க்கும் அதிகமான திருட்டு வழக்கு: குளத்தின் கரையில் மர்மமாக இறந்துகிடந்த கொள்ளையன்

By காமதேனு

வேடசந்தூர் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை சித்தூர் குளத்தில் அடிபட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக வடமதுரை காவல்துறையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்டவர் பெரும்பாறை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (34) என்பதும், இவர் மீது பழனி காவல் நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்து வடமதுரை அருகே உள்ள செங்குளத்துபட்டியில் உள்ள தனது தாய்மாமா செல்லத்துரை வீட்டிற்கு வந்ததாகவும், நேற்று இரவு அதே பகுதியில் உள்ள குளத்தில் மது அருந்தியதாகவும், அவர் கையில் 37,000 பணம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவர் மது அருந்திய போது அவருடன் யாரேனும் மது அருந்தினரா அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்துவிட்டு பணத்தை திருடிச் சென்றனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கொலை குறித்து, தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர் குளத்தில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE