போதையில் தண்டவாளத்தில் தூங்கிய ரவுடி, நண்பர்கள்: நள்ளிரவில் நடந்த பயங்கரம்

By காமதேனு

குண்டர் சட்டத்தில் இருந்து இருமாதங்களுக்கு முன்பு வெளியே வந்த நபர், மதுபோதையில் நண்பர்களுடன் இருந்தபோது ரயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ஜெபசிங்(27). இவரது நண்பர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருவிக நகரைச் சேர்ந்த ச.மாரிமுத்து(23), மற்றொரு மாரிமுத்து(20) இவர்கள் மூவரும் சேர்ந்து கட்டிட வேலை செய்துவந்தனர். நண்பர்கள் மூவரும் தூத்துக்குடியில் நடந்த ஒரு திருமண நிகழ்வுக்கு சென்றிருந்தனர். பின் நேற்று நள்ளிரவில் நண்பர்கள் மூவரும் தூத்துக்குடி மூன்றாவது மைல் பாலத்தின் அருகில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். இதில் மது போதை தலைக்கேறி தண்டவாளத்திலேயே படுத்துத் தூங்கிவிட்டனர்.

இன்று காலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, ஆந்திரா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் படுத்திருந்த ச.மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில் இரு மாரிமுத்துகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். இதில் காயம் அடைந்த ஜெபசிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த ரயில் விபத்தில் பலியான ச.மாரிமுத்து மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழும் கைதாகி இருந்த மாரிமுத்து, இருமாதங்களுக்குமுன்பு தான் ரிலீஸ் ஆகி வெளியில் வந்தார். வெளியில் வந்த இருமாதங்களில் அவர் தன் நண்பர் மற்றொரு மாரிமுத்துவோடு ரயிலில் அடிபட்டு உயிர் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE