லாக்கரால் தப்பிய அடகுக்கடை நகைகள்: 3 கொள்ளையர்கள் கைது

By காமதேனு

மதுரையில் அடகுக் கடையில் கொள்ளையடிக்க முயன்று லாக்கரை உடைக்க முடியாததால் அதனை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். ஜவஹர்புரத்தில் நகை அடகுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதியன்று பூட்டை உடைத்து கடைக்குள் சென்ற மர்மகும்பல் கடையில் இருந்த நகையைக் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குப்பையில் வீசப்பட்ட அடகுக்கடை லாக்கர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல்துறையினர் லாக்கரை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களைச் சேகரித்தனர். பின்னர், அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களைக் காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், மதுரை எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்த வேல்பாண்டி, முத்துமாரி மற்றும் ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த கிரி (எ) வைரமுத்து ஆகிய 3 பேரையும் புதூர் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடகுக்கடையைக் கண்காணித்த பின்னர் கொள்ளையடிக்க முயன்ற நிலையில், இரவு முதல் காலை வரை முயற்சி செய்தும் லாக்கரை உடைக்க முடியாததால் அதனைக் குப்பைத் தொட்டியில் வீசி சென்றதும், மறுநாள் எடுத்துச் செல்லலாம் என திட்டமிட்டதும் தெரியவந்தது.

மேலும், அடகுக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களை விரைந்து கைது செய்த புதூர் காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE