அடுத்தடுத்து பறிபோன வாலிபர், சிறுவர்களின் உயிர்கள்: திருவிழாவிற்கு வந்த இடத்தில் நடந்த சோகம்!

By காமதேனு

திருவிழாவின் போது குளத்தில் குளிக்கச் சென்ற நான்கு பேர் மூழ்கிய நிலையில், மூன்று பேர் உயிரிழந்தனர். 7 வயது சிறுவன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி முத்தாலம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக தேனிக்கு வந்த பேரையூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(24), மீனம்பட்டியை சேர்ந்த சபரிவாசன்(10), நிலக்கோட்டையைச் சேர்ந்த மணிமாறன்(10) மற்றும் ருத்ரன்(7) ஆகிய 4 பேரும் அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில், இன்று மாலை நான்கு பேரும் பாப்பிபட்டிகுளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, இந்த நான்கு பேரில் ஒருவர் தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக ஒன்றன்பின் ஒன்றாக மீதமுள்ள மூன்று பேரும் குளத்தில் குதித்துள்ளனர். காப்பாற்றுவதற்காக சென்ற மூவருடன் சேர்ந்து நான்கு பேரும் நீரில் மூழ்கினர்‌. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில், ருத்ரன் என்ற சிறுவனை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

இதனையடுத்து, பெரியகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நான்கு பேரையும் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில், மூன்று பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ருத்ரன், தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டான். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிந்து பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE