நம்பவைத்த கணவன், மனைவி... அரசு வேலைக்காக லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ!

By காமதேனு

யாரிடமாவது ஏமாந்தவர்கள் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுப்பது வழக்கம். அதிலும், அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காவல்நிலையத்திற்குச் சென்றால் போலீஸார் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் வழக்கம். ஆனால் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரே ஆறரை லட்சம் பணத்தைப் பறிகொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

நாகர்கோவில் என்.ஜி.ஓ காலணி அருகில் உள்ள முகிலன்விளைப் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணப்பெருமாள்(62). ஓய்வுபெற்ற எஸ்.ஐ. இவருக்கு பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(46) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜெயக்குமாரும், அவரது மனைவி சுனிதாவும் நாராயணப் பெருமாளின் மருமகனுக்கு மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை காட்டினார்கள். இதை நம்பி ஓய்வுபெற்ற எஸ்.ஐ நாராயணப்பெருமாள் 6.90 லட்சம் ரூபாயை தம்பதியினரிடம் கொடுத்தார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை.

தொடர்ந்து நாராயணப் பெருமாள் பணத்தை திருப்பிக்கேட்டு அலைந்தார். இதில் 50 ஆயிரம் ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து நாராயணப்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சுனிதா, அவரது கணவர் ஜெயக்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE