திருவிழாவில் வெடி வெடித்து கொண்டாட்டம்... பற்றி எரிந்த வாகனங்கள்: இரவில் மதுரையில் நடந்த விபரீதம்

By காமதேனு

கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மேலவாசல் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக கோயிலைச் சுற்றி பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்றிரவு திருவிழாவை முன்னிட்டு பட்டாசு வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்து வந்த தீப்பொறி பந்தலில் பட்டு தீப்பற்றியது.

உடனடியாக தீயை அணைக்க முயற்சித்தும், மளமளவென தீ பரவத் தொடங்கியது. இதில், பக்தர்களின் வாகனங்கள் பலவும் முழுமையாக எரிந்ததோடு, கோயிலைச் சுற்றி இருந்த பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகளிலும் தீ பரவியது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து வீணானது.

இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மேலவாசல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், குணா(எ)முருகேசன் ஆகிய இருவர் மீது திடீர்நகர் காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் திருவிழாவில் வெடி வெடித்த நிலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு பொருட்சேதம் ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படாமல் தீயணைப்புத் துறையினர் மற்றும் சில இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE