ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் இழந்த ஏட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

By என்.சுவாமிநாதன்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு மோகத்தால் பெரிய அளவில் கடன்பட்டு, காவல்நிலையத்தின் தலைமைக் காவலர் ஒருவரே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மாடன்பிள்ளைதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி செல்வன்(40). இவர் குமரிமாவட்டம், அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது அளவுகடந்த மோகம் உண்டு. இதனால் தன் பணிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு அடிக்கடி செல்போனுக்குள் மூழ்கிக் கிடப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்.

மேலும், அக்கம்,பக்கத்தினரிடம் கடன் வாங்கி ரம்மி விளையாண்டு பல லட்சங்களையும் இழந்திருக்கிறார். இதனால் காவலர் ரவி செல்வனுக்கு லட்சக்கணக்கில் கடன் இருந்திருக்கிறது. இந்நிலையில் அந்த அதிருப்தியில் நேற்று நள்ளிரவு பழச்சாறில் விஷம் கலந்து குடித்துவிட்டார்.

அக்கம், பக்கத்தினர் மீட்டு அவரைச் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நெல்லைமாவட்டம், பழவூர் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். ரம்மி மோகத்தில் காவலர் ஒருவரே தற்கொலைக்கு முயன்றது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE