சென்னையில் பணிபுரியும் கணவர்... மகள்களுக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்த்த தாய்: பழனியில் நடந்த சோகம்

By மு.அஹமது அலி

இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பழனி தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபர்கான். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது சென்னையில் தங்கி தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சபீனா. இவர்களுக்கு சனா, எமீனா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் வரை வீட்டைவிட்டு யாரும் வெளிவராமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, இரண்டு குழந்தைகளும் சடலமாகவும், சபீனா தூக்கிட்டு நிலையிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குழந்தைகள் இருவருக்கும் சபீனா விஷத்தை கொடுத்து கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேலும், சபீனா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதனையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், இரு மகள்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE