சொத்தை அடைய சூழ்ச்சி செய்த அத்தை: 40 நாள் குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த கொடூரம்!

By காமதேனு

சொத்துக்காக தனது அண்ணன் மகனின் 40 நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக அத்தை உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் மனோ. பூக்கட்டும் தொழிலாளியான இவருக்கும், அம்சா நந்தினிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

கடந்த 4-ம் தேதி அதிகாலையில் தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதைக் கண்டு அம்சா நந்தினி அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் வீடு முழுவதும் தேடி பார்த்தபோது கழிவறையில் இருந்த வாளி தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இக்கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியம் தலைமையில் 2 தனிப்படைபோலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மனோவின் அத்தை தான் குழந்தையைக் கொன்றார் எனத் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," மனோவின் தந்தை ராமு இறந்து விட்ட நிலையில் அவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவருக்குப் பிறகு வீடு தனக்கு கிடைக்கும் ராமுவின் சகோதரி தேன்மொழி நினைத்திருந்தார். அத்துடன் தனது மகள் பாரதியையும் திருமணம் செய்து வைக்க நினைத்திருந்தார். ஆனால், அது நடக்காததால் தேன்மொழியும், அவரது மகள் பாரதியும் மனோ குடும்பத்தைப் பிரிக்க முயற்சி செய்துள்ளனர். இந்த நிலையில் தான் மனோவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தேன்மொழியும், பாரதியும் குழந்தையை தண்ணீரில் அழுத்தி கொலை செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலையை மறைத்த பாரதியின் கணவரின் அக்கா அனுவைும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்று கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE