`ஆரம்ப கட்டத்தில் விசாரணை இருப்பதால் ஜாமீன் கிடையாது'- விக்னேஷ் கொலையில் கைதான காவலர்களின் மனு தள்ளுபடி!

By காமதேனு

விக்னேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு ஜாமீன் வழங்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த 18.5.2022 அன்று சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக தலைமைச் செயலக காலனி போலீஸார் கைது செய்தனர். அன்று இரவே விக்னேஷ் விசாரணையின் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விக்னேஷை காவல் நிலையத்தில் போலீஸார், கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமைச் செயலக காலனி காவல் நிலைய, காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி போலீஸார் சிறையில் அடைத்தனர். காவலர் பவுன்ராஜ் தவிர மற்ற 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE