வீடியோவை காட்டி 2 ஆண்டாக இளம்பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு: மருத்துவ மாணவர் சிக்கியது எப்படி?

By ரஜினி

இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி 2 வருடமாக பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவ மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு கரோனா காலத்தின் போது ஊரடங்கில் தாயபாஸ், செஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதற்காக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் பிரதீப்(21) என்பவர் அடிக்கடி பெண் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் திடீரென ஒரு நாள் பிரதீப் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, அவர் குளிக்கும் போது எடுத்த வீடியோவைத் தொலைக்காட்சியில் போட்டுக் காண்பித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் பிரதீப்பிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது பிரதீப் அவரை உடன்பட வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு முதல் பிரதீப் அந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அந்த பெண் சில நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும், இளம்பெண்ணின் தம்பி மீது பொய் புகார் அளித்து சிறையில் தள்ளிவிடுவதாக பிரதீப் மிரட்டியுள்ளார். இதனால் கடன் பிரச்சினையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இளம்பெண் போலீஸில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக பிரதீப் மீண்டும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காரணத்தினால் மன உளைச்சல் அடைந்த இளம்பெண் மன நல மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்த இளம்பெண், 2 வருடமாக மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த பிரதீப் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி டேங்க் பேக்டரி போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் பிரதீப்பை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் மீது பெண்ணின் விருப்பம் இல்லாமல் தொடர்பு கொள்ளுதல், பாலியல் தொந்தரவு செய்தல், ஆபாசமாக படம் எடுத்தல், பாலியல் பலாத்காரம், மிரட்டல், பாலியல் வன்புணர்வு, உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆபாச வீடியோ எடுத்த செல்போனை பிரதீப்பிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வீடியோவை வேறு யாருக்காவது அனுப்பியுள்ளாரா அல்லது வேறு பெண்களை இதே போல வீடியோ எடுத்துள்ளாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE