ஏடிஎம்-மில் ஒலித்த அலாரம்?... போலீஸுக்கு சென்ற மெசேஜ்: நள்ளிரவில் நடந்தது என்ன?

By காமதேனு

அவனியாபுரம் அருகே நள்ளிரவில் எஸ்பிஐ ஏடிஎம்-மில் இருந்து வந்த சத்தத்தால் ஏடிஎம்-மில் கொள்ளையடிக்க முயற்சித்தனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அவனியாபுரம் மெயின் ரோட்டில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்றிரவு ஒரு மணி அளவில் ஏடிஎம்-ஐ தவறாக பயன்படுத்துவதாக எஸ்பிஐ வங்கி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அவனியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது.

அதனடிப்படையில், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரைத்துறை காவல் நிலைய ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் துணை ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட காவல் துறையினர் ஏடிஎம் மையத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, ஏடிஎம்-மில் யாரும் இல்லாததால் அக்கம்பக்கத்தில் தேடி என்ன காரணத்தால் சத்தம் வந்தது என்று பார்த்தனர். பின்னர் இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பிவிட்டு ஏடிஎம் மையத்தை பூட்டிவிட்டுச் சென்றனர்.

எஸ்பிஐ ஏடிஎம்

அதைத்தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் இன்று காலை சோதனை செய்தனர். ஏடிஎம்-மில் இருந்து பணம் திருடப்பட்டதா, வேறு ஏதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சத்தம் வந்ததா என்று அவனியாபுரம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், காவலர்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாக ஒரே ஒரு நபர் மட்டும் ஏடிஎம் மையத்துக்குள் சென்று நீண்ட நேரம் கழித்து வெளியே செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர்தான் திருட முயற்சித்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE