`இப்படிதான் எல்லாரையும் கூப்பிடுவியா'- ஆபாசமாக அழைத்தவரை சிறையில் தள்ளிய பெண் போலீஸ்

By காமதேனு

பெண் போலீஸை ஆபாசமாக அழைத்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட கேளம்பாக்கம் காவல் சரகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் ரவிக்குமார். இவரது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயாரை கவனித்து கொள்வதற்காக உதவி ஆணையர் ரவி சுழற்சி முறையில் பெண் காவலர்களை நியமித்துள்ளார். அதன்பேரில் நேற்று உதவி ஆணையரின் தாயாரை பார்த்துக்கொள்ள கானாத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை பெண் காவலர் ஒருவரை அனுப்பி உள்ளனர்.

பணி முடிந்து அந்த பெண் காவலர் மாற்று காவலருக்காக மருத்துவமனை வெளியே காத்திருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பெண் காவலரிடம் "வரியா வரியா" என ஆபாசமாக பேசி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்த பெண் காவலர் மருத்துவமனைக்குள் சென்றார். மாற்று காவலர் வந்த பின்னர் கீழே வந்த பெண் காவலரிடம் அதே நபர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் காவலர், அந்த நபரிடம் இப்படிதான் எல்லாரையும் கூப்பிடுவியா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, தனது நண்பரை வரவழைத்த அந்த நபர், பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

உடனே பெண் காவலர் இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கலிக்குன்றம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (29) மற்றும் அவரது நண்பர் குணசேகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் உள்ள தாயாரை கவனித்து கொள்ள பெண் காவலரை பணியமர்த்திய உதவி ஆணையர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE