மனைவியை ஆபாசமாக சித்தரித்து வாலிபரை மிரட்டும் கும்பல்: ஆன்லைன் செயலில் கடன் வாங்கியதால் விபரீதம்

By ரஜினி

கடன் வாங்கியது தெரியாமல் பணத்தை செலுத்தாததால் செல்போனை ஹேக் செய்து அதில் உள்ள தொடர்பு எண்களுக்கு மனைவி, உறவினர்கள், குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் அனுப்பி வாலிபரை மிரட்டி வருகிறது வடமாநில கும்பல். இது குறித்து புகார் அளித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், தனியார் கடன் செயலி ஒன்றை தனது செல்போனில் டவுண்லோடு செய்து உள்ளார். செயலியை டவுண்லோடு செய்யும்போது, செல்போனில் உள்ள தகவல்களை எடுப்பதற்கான பல்வேறு அனுமதிகளை அளித்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலமாக உள்ள விளம்பரங்கள் மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பின்னர் அந்த செயலியில் 2,500 ருபாய் கடன் வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்த பின்னர் பணம் வரவில்லை. ஒரு வாரம் கழித்து பணத்தை செலுத்துமாறு வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென வாட்ஸ் - அப் கால் மூலம் மிரட்டினாராம்.

ஒரு வாரத்திற்குள் வாங்கிய 2,500 ரூபாய் உடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் பத்து நிமிடத்திற்குள் நாங்கள் அனுப்பும் லிங்கில் பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் அந்த கும்பல் மிரட்டியதாம். அந்த லிங்க்கில் பணம் செலுத்த முடியாததால் தொடர்ந்து மிரட்டி வந்த வடமாநில கும்பல், 35 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வங்கியில் சென்று விசாரித்தபோது தான் பணம் கேட்டு செயலியில் விண்ணப்பித்தது மூன்று நாள் கழித்து கடன் கிடைத்தது தெரியவந்ததாகவும், செயலி மூலம் கடனாகப் பணம் வந்தது தெரியாமல் இருந்ததாகவும், பணத்தை செலுத்தாததால் என்னுடைய போட்டோக்களை செல்போன்களில் இருந்து எடுத்து, என் தொடர்பில் உள்ளவர்களுக்கு தனது மனைவி, உறவினர்கள், குழந்தைகள் ஆகியோர் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி பணத்தை கட்டுமாறு மிரட்டியுள்ளனர்.

உறவினர்கள், நண்பர்களுக்கு ஆபாசமாக புகைப்படம் சென்றதால், அவர்கள் என்னை தொடர்பு கொண்டு விசாரிக்க ஆரம்பித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அவர்கள் இந்தியில் மிரட்டுவதால் தெளிவாக புரியவில்லை என்பதை அறிந்த வடமாநில கும்பல், கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தி தமிழில் மொழிபெயர்த்து குறுஞ்செய்தியாக அனுப்பி மிரட்டியதாக மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கூறினார்.

மேலும், தன்னையும், மனைவியையும், உறவினர்களையும் ஆபாசமாக சித்தரித்து நண்பர்களுக்கு புகைப்படம் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், ஆன்லைன் வகுப்பிற்காக தன் குழந்தைகள் வைத்திருந்த செல்போனுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் குழந்தைகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி உள்ளதாகவும், இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திலும், தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும், புகாரை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE