அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனச் சொல்பவர்களை நம்ப வேண்டாம்: அலர்ட் செய்யும் போலீஸ் கமிஷனர்!

By காமதேனு

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு, இணையவழி குற்றம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் வேலை வாங்கிக் கொடுக்கிறோம் எனச் சொல்லி மோசடிப் பேர்வழிகள் தமிழகத்தில் ஏமாற்றி வருகின்றார்கள். போலியான நியமன ஆணை, போலியான நேர்முகத் தேர்வு, போலியான அலுவலகங்கள் எனத் திட்டமிட்டு சிலர் ஏமாற்றப்படுகிறார்கள். இதுபோல் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறைக்கு வந்திருக்கின்றன. வேலை வாங்கித் தருவதாக ரூ.5 கோடிக்கு மேல் ஏமாற்றிய மோசடியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனச் சொல்லும் நபர்களை யாரும் நம்ப வேண்டாம். அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக இருந்தால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும். மேலும் முறைப்படி இணையத்திலும் தெரிவிக்கப்படும்" என்று கூறினார்.

மேலும், "சென்னையில் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் தனக்குக் கீழ் ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு 2017-ம் ஆண்டிலிருந்து இணையதளம் மூலமாகச் சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளைப் பதிவு செய்து விபச்சாரம் நடத்தி வந்திருக்கிறார். அந்த தொழிலால் பாதிக்கப்பட்ட பெண்கள் கணக்கிலேயே மொபைல் செயலிகள் மூலம் பணத்தைப் பெற்றுவந்தார். அவரிடமிருந்து 7 மொபைல் போன்கள் மற்றும் 30 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற குற்றங்களில் ஆவண அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் மத்திய குற்றப்பிரிவின் கீழ் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.8 கோடி மதிப்பிலான வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.ரூ.190 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் ரூ.7.69 கோடி பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE