டான்ஸ் மாஸ்டர் ஒருவரிடம் லிப்ட் கேட்டுச் சென்ற இளைஞர்கள், செல்ஃபி எடுக்கப் போவதாக அவரிடம் கூறி இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் ஒரு டான்ஸ் மாஸ்டர். சென்ட்ரல் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஹோண்டா சிபிஆர் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் லிப்ட் கேட்ட இரண்டு இளைஞர்களை எழும்பூர் பாலம் அருகே இறக்கிவிட்டுள்ளார். ‘உங்க பைக் அழகா இருக்குது! ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’ என சரண்ராஜிடம் அந்த இளைஞர்கள் கேட்டுள்ளனர். ‘செல்ஃபிதானே தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என அவரும் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்துள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர்களில் ஒருவர் பைக் மீது அமர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பது போல நடித்துள்ளார். அடுத்த சில நொடிகளிலேயே அருகிலிருந்த சரண்ராஜைக் கீழே தள்ளிவிட்டு இருவரும் அங்கிருந்து வேகமாகத் தப்பித்துச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார் சரண்ராஜ். எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் சசிக்குமார் என்பவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சரண்ராஜின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.