ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன இயக்குநர்கள் 6 பேர் தலைமறைவு: தேடுதல் வேட்டையில் போலீஸ்

By காமதேனு

1 லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன இயக்குநர்களை கைது செய்ய 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 24-ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநராக பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள 6 இயக்குநர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆருத்ரா நிதிநிறுவன 6 இயக்குநர்களை தீவிரமாக தேடி வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE