பின் தொடர்ந்த கும்பல்... கவனிக்காத நகை வியாபாரி: கடைசியில் நடந்த விபரீதம்

By காமதேனு

தஞ்சை பேருந்து நிலையம் அருகில் நகை வியாபாரி ஒருவர் உணவகத்தில் உணவருந்தியபோது அவரது கவனத்தை திசைதிருப்பி 6.200 கிலோ தங்க நகைகள் மற்றும் 14 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த நகை மொத்த வியாபாரி மணி தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு தங்க நகைகளை விற்பனை செய்து வருகிறார். அதன்படி நேற்றும் சென்னையில் இருந்து தங்க நகைகளுடன் தஞ்சை வந்தார்.

பல்வேறு கடைகளுக்கும் சென்று நகைகளைக் கொடுத்துவிட்டு பணத்தையும் பெற்றுக் கொண்டு சென்னை செல்வதற்காக நேற்று இரவு தஞ்சை பேருந்து நிலையம் வந்தார். உணவு அருந்துவதற்காக அருகில் உள்ள தனியார் உணவகத்துக்கு சென்று உணவருந்தினார். அப்போது அவரது நகை மற்றும் பணம் அடங்கிய பையை கீழே வைத்துவிட்டு, உணவகத்துக்கு பணம் கொடுத்திருக்கிறார்.

பணம் கொடுத்துவிட்டு மீண்டும் பையை தேடிய போது அந்த பையை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மணி உடனடியாக கடை முழுவதும் தேடியபோதும் அவரது நகை பையை காணவில்லை. இதுகுறித்து உடனடியாக மேற்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட போலீஸார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மணி ஒவ்வொரு நகை கடைக்கும் சென்றபோது அவரை ஒரே நிறத்தில் சட்டை அணிதிருந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் உணவகத்திலும் அவரை திசை திருப்பும் நோக்கில் அவரை சுற்றி ஒன்பது பேரும் நின்றிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து 2 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

அந்தப் பையில் 6.200 கிலோ நகைகள் மற்றும் 14 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை இருந்தது. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள தஞ்சை பேருந்து நிலையம் அருகே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE