பிறந்தநாளில் ஏரிக்கரையில் மது விருந்து: நண்பர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்

By காமதேனு

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் சக நண்பர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோழவரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாரிமுத்து

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்துள்ள அலமாதி கிருஷ்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பிளம்பிங் மற்றும் எலெக்ட்ரிக்கல் பணி செய்து வந்துள்ளார். நேற்று அவருக்கு பிறந்தநாள் விழா என்பதால் நண்பர்கள் மது விருந்து வைக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து மாரிமுத்து அலமாதி ஏரியில் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் உள்ளிட்ட நண்பர்களுடன் கேக் வெட்டினார். இதைத் தொடர்ந்து நண்பர்களுக்கு மது விருந்து வைத்தார் மாரிமுத்து. ஏரிப்பகுதி என்பதால் மது போதையிலிருந்த நண்பர்கள் கிண்டலும் கேலியுமாக மது அருந்தத் தொடங்கினர்.

போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுக் கைகலப்பானது. அப்போது பிறந்தநாள் கொண்டாடிய மாரிமுத்துவை ராமமூர்த்தி கன்னத்தில் அறைந்துள்ளார். அடுத்த நொடியே மாரிமுத்து அங்கேயே சரிந்து விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரும் மாரிமுத்துவை பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அப்போது மாரிமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சோழவரம் காவல் துறையினர், மாரிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாகச் சோழவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளிலேயே இளைஞர் ஒருவர் நண்பர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE