தெலங்கானா தலைநகர் ஹைதராபாதின் புறநகர்ப் பகுதியான கொண்டாப்பூரின் ஸ்ரீராம்நகர் காலனியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் - காயத்ரி தம்பதியினர். ஸ்ரீகாந்த் கடந்த சில ஆண்டுகளாகக் குடிமைப் பணித் தேர்வுக்காகத் தயாராகிவந்த நிலையில், அவருக்கும் அவருடன் பயிற்சி மேற்கொண்ட ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு உருவானது. ஒருகட்டத்தில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவதாகச் சொல்லி, ஸ்ரீகாந்தின் வீட்டுக்குச் சென்று அப்பெண் அவ்வப்போது தங்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஸ்ரீகாந்துக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், காயத்ரி அவர்களுடன் சண்டையிட்டு வந்திருக்கிறார். இதையடுத்து அங்கிருந்து அந்தப் பெண் வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், மே 26-ம் தேதி அந்தப் பெண்ணைத் தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார் காயத்ரி. அங்கு சென்ற அந்தப் பெண்ணை அங்கிருந்த 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதைக் காணொலியாகப் பதிவுசெய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தால் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என அந்தக் கும்பல் மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து போலீஸில் அந்தப் பெண் புகார் அளித்தார். விசாரணையில், காயத்ரியின் உத்தரவின் பேரில் இந்தக் குற்றத்தை அந்தக் கும்பல் இழைத்ததாகத் தெரியவந்திருக்கிறது. அவர்கள் கூலிப்படையினர் என்றும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காயத்ரி உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.