திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஆயுதங்களால் பெண்களைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தாஸ். இவருக்கும் கூவம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கும் நீண்ட பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தாஸின் ஆதரவாளர்கள் நேற்றிரவு கூவம் பகுதியில் உள்ள சார்லஸின் வீட்டிற்கு இரும்பு கம்பி மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் சென்றனர். அப்போது வீட்டிலிருந்த சார்லஸ் மற்றும் அவரது மனைவி விக்டோரியா, மகள் சவிதா, மகன் சாருகேஷ் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் வீட்டு உபயோக பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக விக்டோரியா மற்றும் சவிதா ஆகியோர் அலரி துடித்தனர். அங்கிருந்தவர்கள், அவர்களை மீட்டு உடனடியாக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சார்லஸின் சகோதரர் சத்தியமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய மப்பேடு காவல்துறையினர் சார்லஸ் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சார்லஸ் வீட்டில் உள்ள பெண்களைத் தாக்குவதும், வீட்டில் உள்ள பொருட்களை மர்ம கும்பல் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.