சென்னை ஆவடி அருகே திருமணமான 9 மாதத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் பிருந்தாவன் அவென்யூவில் வசிப்பவர் ஐயப்பன் (35). இவர் பிராட்வேயில் உள்ள ஒரு பாத்திரக் கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான தரண்யாவுக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இன்று காலை ஐயப்பன் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். பணியிடத்தில் இருந்து எப்போதும் மனைவியிடம் அலைபேசியில் பேசுவது அவரது வழக்கம். அதன்படி இன்றும் தனது மனைவி தரண்யாவை அலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அவர் அலைபேசியை எடுக்கவில்லை. இதனையடுத்து அவர் தான் கூடியிருக்கும் வீட்டு உரிமையாளர் ரஞ்சித் என்பவருக்கு அலைபேசி மூலம் அழைத்து விஷயத்தைக் கூறி தனது வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அதனையடுத்து ரஞ்சித் வந்து பார்த்தபோது தரண்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக காவல் துறைக்கும், ஐயப்பனுக்கும் இந்த தகவலை ரஞ்சித் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆவடி காவல் உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தரண்யாவுக்குத் திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் திருவள்ளூர் கோட்டாட்சியர் விசாரணை பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.