தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பொதுப்பாதை குறித்த தகராறில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி கோவள்ளிகோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (53). இவர் சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் (30) என்பவருக்கும், அவரது உறவினர்களுக்கும் பொது வழித்தடம் தொடர்பாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து ஊரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கந்தசாமி இடம்பெற்றிருந்தார். வழித்தட பிரச்சினை குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கந்தசாமி, குபேந்திரனுக்கு எதிராகச் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது குபேந்திரன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை கந்தசாமி பால் ஊற்றுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். விநாயகர் கோயில் அருகே கந்தசாமியை வழிமறித்த குபேந்திரன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கந்தசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு குபேந்திரன் தப்பியோடினார். இதில் கழுத்துப் பகுதில் பலத்த காயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது சடலத்தை எடுக்க விடாமல் பென்னாகரம் - மேச்சேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலின் பேரில், பென்னாகரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் மற்றும் ஏரியூர் காவல் நிலைய போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குற்றவாளியைக் கைது செய்வதாக அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனையடுத்து கந்தசாமியின் உடலை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். அதியமான்கோட்டை அருகே மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு முன் நின்றிருந்த குபேந்திரனை, பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸார் பிடித்து விசாரித்தபோது, அவர் கொலை செய்துவிட்டு தப்பிவந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.