மதுரை ஒத்தக்கடை பகுதியில் இளைஞர் ஒருவர் இரும்புக்கம்பியால் அடித்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, மாயாண்டிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் தவசி(25). நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை உத்தங்குடியை அடுத்த தட்டான்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் தலைப்பகுதியில் பலத்த காயங்களோடு சடலமாகக் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணையில் நடத்தினர், விசாரணையில் அவர் தவசி என்பது தெரியவந்தது. இதனையடுத்து, உடலை உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்தனர்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், தவசி தனது நண்பர்களுடன் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டிருக்கலாம் எனவும், இரும்புக்கம்பியால் தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இளைஞரை வெட்டிக் கொன்றது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.