குப்பைத்தொட்டியில் மனித எலும்புக்கூடு: இரவில் பதறிய சென்னை தூய்மைப் பணியாளர்

By காமதேனு

சென்னை மாநகராட்சி குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித எலும்புக்கூடை யார் வீசிச் சென்றது? என்ன நடந்தது? என்பது குறித்து வேப்பேரி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் தணிக்காச்சலம் (40). இவர் 58-வது வார்டு தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு சூளை பகுதியில் தணிக்காச்சலம் குப்பை வண்டியில் சென்று குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சூளை காளத்தியப்பா தெரு, வீச்சூர் முத்தையா சந்திப்பு அருகே உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டியில் குப்பைகளை எடுப்பதற்காக தணிக்காச்சலம் சென்ற போது, குப்பைத்தொட்டிக்கு அருகே இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி தீபக் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீபக் கவரில் எலும்புக்கூடு இருப்பதை உறுதி செய்த பின்பு வேப்பேரி போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேப்பேரி போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று பிளாஸ்டிக் பையில் இருந்த மனித மண்டை ஓடு, கை, கால், எலும்புக்கூட்டை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மனித எலும்புக்கூடை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருவதால் மருத்துவக் கல்லூரி மாணவர் யாரேனும் ஆய்வுக்காக எலும்புக்கூட்டை வாங்கி வந்து பயன்படுத்திய பின்னர் அதனை குப்பைத்தொட்டியில் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் எலும்புக்கூட்டை வீசி சென்ற நபரை பிடித்து விசாரணை நடத்திய பின்னரே முழு தகவல் கிடைக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE