நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மார்பில் பந்து தாக்கியதில் ஆறாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே உள்ள வன்னிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார்-வனிதா தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகனான 11 வயது நிறைந்த சுபாஷ்குமார் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
விடுமுறை என்பதால் நேற்று மாலை 5 மணிக்கு நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மற்றொரு மாணவர் அடித்த பந்து வேகமாக சுபாஷ்குமாரின் மார்பில் தாக்கியது. இதில், வலி தாங்காமல் அதே இடத்தில் சுருண்டு விழுந்து மயங்கினார்.
மற்றவர்கள் வீட்டில் தெரிவிக்க உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சுபாஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, நயினார்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.