பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் வசிப்பவர் அப்துர் ரஹீம். நேற்று மாலை அவரது மனைவி பல்கிஸ் (63), மருமகள் ஷேக்கா ( 25) ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அவர்கள் வீட்டு வாசலில் இரு சக்கர வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய முககவசம் அணிந்திருந்த மூன்று பேர் திடீரென்று அப்துர் ரஹீமின் வீட்டுக்குள் புகுந்தனர்.
முன்பின் தெரியாதவர்கள் இப்படி திடீரென்று வீட்டுக்குள் புகுந்ததைக் கண்ட பல்கீஸ், அவர்களை தடுத்து நிறுத்தி, நீங்கள் யார்? சொல்லாமல் கொள்ளாமல் இப்படி வீட்டிற்குள் வருகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு நாங்கள் உங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம் என்று கூறிக்கொண்டே பல்கீஸை உள்ளே தள்ளியவாறு அவர்களும் உள்ளே நுழைந்து விட்டனர்.
மாமியாரின் குரல் கேட்டதும் உள்ளே இருந்து வேகமாக வந்த மருமகள் ஷேக்காவின் கழுத்தில் அவர்களில் ஒருவன் கத்தியை வைத்து அசையவோ, கத்தவோ கூடாது என்று மிரட்டினான். இன்னொருவன் பல்கீஸின் கழுத்தில் கத்தியை வைத்தான். இருவரின் கழுத்தில், காதில் இருந்த தங்க நகைகளை கத்தி முனையில் பறித்துக் கொண்டனர். அதன்பிறகு பீரோ சாவி எங்கே உள்ளது என்று கேட்டுள்ளனர்.
அதற்கு பல்கீஸ், தனது கணவர் அப்துல் ரஹீம் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுள்ளார், அவருக்குத்தான் சாவி இருக்குமிடம் தெரியும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதைக்கேட்டதும் கொள்ளையர்கள் வயதானவர் என்றும் பாராமல் அவரின் கன்னத்தில் அறைந்து இருவரையும் சமையலறையில் வைத்து பூட்டினர்.
அதன்பிறகு மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க வளையல், மோதிரங்கள் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்து கொண்டு வீட்டின் கதவையும் வெளிப்புறமாக தாளிட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
பள்ளிவாசலுக்கு சென்றிருந்த அப்துர் ரஹீம் தொழுகை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது வீடு வெளிப்புறம் தாளிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். அவர் கதவைத் தட்டவும் உள்ளிருந்து அவரது மனைவியின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவர் சமயலறையிலிருந்து மனைவியையும் மருமகளையும் திறந்துவிட்டு ஆசுவாசப்படுத்தினார். அதன்பின் என்ன நடந்தது என்று கேட்க இருவரும் பதற்றம் விலகாமல் நடந்ததைச் சொன்னார்கள். விவரம் தெரிந்தவுடன் அப்துர் ரஹீம் உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதையடுத்து கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்த போலீஸார் நடந்த விவரங்களை விசாரித்து தெரிந்துகொண்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.