மதுரையில் ஊராட்சி மன்ற செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்து கருப்பாயூரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சியின் செயலாளராக வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த லஷ்மணன் என்பவர் பணிபுரிந்து வந்தார். ஊராட்சிமன்ற செயலாளர் பணியோடு சேர்த்து தங்களது குல வழக்கப்பட்டி வரிச்சியூர் அருகேயுள்ள கருப்புகால் காளியம்மன் கோயிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை லஷ்மணன் தனது இருசக்கர வாகனத்தில் கோயில் பூஜைக்காக தச்சனேந்தல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரை வழிமறித்த சில மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் லஷ்மணனை கடுமையாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த லஷ்மணனை சாலையில் சென்றவர்கள் தூக்கி ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து, கருப்பாயூரணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் பிரச்சினையா அல்லது ஊராட்சியில் நடைபெற்ற பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வரிச்சியூர் பகுதியின் அருகிலேயே குன்னத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது, ஊராட்சி மன்ற செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.