குப்பையோடு எரிக்கப்பட்ட உடல்... தலை, கைகளை தேடும் போலீஸ்: பூந்தமல்லியில் பயங்கரம்

By காமதேனு

தலை மற்றும் கைகள் இல்லாத ஆண் சடலம் எரியூட்டப்பட்ட குப்பைக் கிடங்கில் வீசப்பட்டதை அறிந்து மூன்று காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் விரைந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட எல்லை தகராறு காரணமாக உடற்கூறாய்விற்கு அந்த உடலை அனுப்புவதில் இழுபறி ஏற்பட்டது. தலையைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

பூந்தமல்லி அடுத்துள்ள பாரிவாக்கத்திலிருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கு உள்ளது. எப்போதும் புகைந்த நிலையிலேயே இந்த குப்பைக் கிடங்கு இருக்கும். இந்த நிலையில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய மூன்று காவல்நிலையத்திலிருந்தும் காவலர்கள் வந்திருந்தனர். உடல் இருக்கும் இடம் யாருடைய ஏரியாவிற்குள் வரும் என்பதில் அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. தங்கள் எல்லைக்குள் இந்த இடம் வரவில்லை என ஆவடி காவல்நிலைய காவலர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். இதையடுத்து பூந்தமல்லி, திருவேற்காடு காவலர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாகச் செல்வோர் காவலர்களின் சண்டையைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு சென்றனர். ஒரு வழியாக திருவேற்காடு காவல்நிலைய காவலர்களால் அந்த உடல் கைப்பற்றப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் கொலை செய்யப்பட்டவரின் தலை மற்றும் கைகள் அப்பகுதியில் வீசப்பட்டனவா என காவல்துறையினர் அப்பகுதியில் நீண்ட நேரமாகத் தேடினர். கடைசி வரை தலை மற்றும் கைகள் கிடைத்தபாடில்லை. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தலையை தேடும் பணி நடைபெற்றது. உடல் அடையாளம் காணப்படாததால் இறந்தவர் குறித்த எந்த தகவலும் காவல்துறையினருக்குக் கிடைக்கவில்லை. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவாரமாகக் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை போலீஸார் திரட்டி வருகிறார்கள். இதே போல் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு மணலியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் தலையும் இதுவரை கிடைக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE