கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை... 12 லட்சம் அபராதம்: விஸ்மயா தற்கொலை வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

By என்.சுவாமிநாதன்

இளம்பெண் விஸ்மயா மரணம் கடந்த ஆண்டு கேரளத்தை உலுக்கியது. 22 வயதே ஆன ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி விஸ்மயா வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான வழக்கில் அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இன்று கிரண்குமாருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

விஸ்மயா

விஸ்மயாவுக்கும், கேரள மோட்டார் வாகனத்துறையில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய கிரண்குமாருக்கும் திருமணம் முடிந்து ஓராண்டுகளே ஆகியிருந்தது. திருமணத்தின்போது ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு படித்து வந்தார் விஸ்மயா. திருமணத்தின்போது கிரண்குமாருக்கு ஒன்றேகால் ஏக்கர் நிலம், 100 சவரன் நகைகள், பத்துலட்ச ரூபாயில் கார் என வரதட்சணையாக வாரி இறைத்தனர் விஸ்மயாவின் பெற்றோர். இதில் வரதட்சணையாகத் தனக்குத்தந்த கார் பிடிக்கவில்லை எனவும், அதற்குப்பதிலாக பணமாக வேண்டும் எனவும் வரதட்சணை கொடுமை செய்யத் தொடங்கினார் கிரண்குமார். ஒருகட்டத்தில் வரதட்சணைக் கொடுமையைத் தாங்கமுடியாமல் விஸ்மயா தன் கணவரின் இல்லத்தில் இருக்கும் குளியலறையிலேயே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தன் கணவரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்துபோன தனது முகம் மற்றும் உடல்பகுதிகளை உறவினர்கள் சிலருக்கு விஸ்மயா வாட்ஸ் அப்பில் அனுப்பிவைத்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதே, ஒட்டுமொத்தக் கேரளத்தையும் விஸ்மயா விவகாரத்தைப் பேச வைத்தது. இதேபோல் அவரது தந்தை திரிவிரிகாமன் நாயரிடம், விஸ்மயா இனியும் இந்த வீட்டில் இருக்கமுடியாது என்றும், தான் எப்படியெல்லாம் வரதட்சணைக் கொடுமைக்கு உள்ளாகிறேன் என்பது குறித்து அழுதுகொண்டே பேசும் ஆடியோவும் வைரல் ஆனது. இந்த ஆடியோதான் இவ்வழக்கில் முக்கிய சாட்சியானது.

கிரண்குமார்

இதுதொடர்பான வழக்கில் கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித் நேற்று அளித்த தீர்ப்பில், “இந்திய தண்டனைச் சட்டத்தின் 304, 306-வது பிரிவு தற்கொலைக்குத் தூண்டுதல், 498 ஏ, கணவர் அல்லது உறவினரால் பெண் கொடுமைக்குள்ளாதல், 506 , வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3, பிரிவு 4 ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கேரள அரசு, 500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் 42 பேர் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் காவல் துறையால் 102 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. குற்றவாளி என தீர்ப்பு கொடுத்த நீதிபதி கே.என்.சுஜித் இன்று தண்டனை விவரங்களை அறிவித்தார். முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்த கிரண்குமார் தன் பெற்றோர் வயோதிக நிலையில் இருப்பதாக நீதிபதி சுஜித்திடம் மன்றாடினார். தன் அப்பாவிற்கு ஞாபகமறதி இருப்பதாகவும், அம்மாவுக்கு சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு இருப்பதாகவும், வயோதிகர்களான அவர்களை நான் கவனிக்க வேண்டி இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்கவேண்டும் என முறையிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞரோ, இவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதன் மூலமே சமூகத்தில் வரதட்சணையை ஒழிக்க முடியும் என்னும் வாதங்களை வைத்தார்.

இவ்வழக்கில் கிரண்குமாருக்கு 304(ஏ) பிரிவின் கீழ் பத்து ஆண்டுகள் சிறைதண்டனையும், 306வது பிரிவின் கீழ் 6 ஆண்டுகள் சிறை மற்றும் 2 லட்ச ரூபாய் அபராதமும், இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறினார். மேலும், 498(ஏ) பிரிவின் கீழ் 2 வருடம் சிறை மற்றும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் எனவும், அந்த அபராதத்தொகையைக் கட்டத் தவறினால் மூன்றுமாதங்கள் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகள் சிறை மற்றும் பத்து லட்சம் ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டும் எனவும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் பிரிவு 4ன் கீழ் ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் 15 நாள்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனக் கூறியதால், கிரண்குமாருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். இதேபோல் மொத்தம், 12,55,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு லட்ச ரூபாயை விஸ்மயாவின் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி கே.என்.சுஜித் தீர்ப்பு கூறினார்.

உருகிய விஸ்மயா குடும்பம்!

நீதிமன்றத்திற்கு கிரண்குமாருக்கு வரதட்சணையாக வாங்கிக் கொடுத்த காரிலேயே வந்தார் விஸ்மயாவின் தந்தை திரிவிரிகாமன். இதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்த காரில் என் மகளின் ஆத்மா குடிகொண்டிருக்கிறது. இன்று அதன் மனம் குளிர்ந்திருக்கும்’ என நா தழுதழுக்கச் சொன்னார். இதேபோல் விஸ்மயாவின் தாயும், இவ்வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது”என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE