நிதி நிறுவனத்திற்கு சென்ற தம்பதி திடீர் மாயம்... ஏரியில் புதைக்கப்பட்ட கொடுமை: கந்து வட்டி கடனால் கொலை?

By காமதேனு

மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட, காஞ்சிபுரம் நெசவாள தம்பதியினரின் உடல்கள் அரக்கோணம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சைஅரசன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மனைவி நளினியுடன் புஞ்சைஅரசன்தாங்கல் பகுதியில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும் இவரது மகள் சசிகலாவிற்கு அதே கிராமத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில், மகனுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். கடந்த சிலவருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அதிக வட்டிக்குக் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கரோனா காரணத்தால் நெசவுத் தொழில் மிகவும் நலிவடைந்துள்ள நிலையில் அவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து வட்டிக்கு வட்டி எனக் கடன் தொகை அதிகரித்தது.

மேலும் அந்த நிதி நிறுவனத்தின் சார்பில் நெசவாளர் தம்பதியினரை அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார்கள். புஞ்சைஅரசன்தாங்கலில் உள்ள வீட்டைக் கடனுக்கு ஈடாக கிரயம் செய்து கொடுக்குமாறு நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாமண்டூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு மாணிக்கம்-நளினி தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது அவர்களை பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் நேற்று முதல் காணவில்லை.

கொலை

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, மின்னல் கிராம ஏரிக்கரையில் மர்மமான முறையில் இரண்டு சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இன்று காலையில் அரக்கோணம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் காஞ்சிபுரம் புஞ்சைஅரசன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள் என்பதும், நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களைக் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை என மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE