லிப்ட் விபத்தில் பறிபோன மேலும் ஒரு உயிர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளை தேடும் போலீஸ்

By காமதேனு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்குச் சொந்தமான திருமண மண்டப லிப்ட் விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சீத்தல்

திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவிற்கு சொந்தமான ஜெ.எஃப்.என் திருமண மண்டபம் உள்ளது. கடந்த மே 13-ம் தேதி அந்த திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் சீத்தல், ஜெயராமன், விக்னேஷ் ஆகியோர் லிப்டில் இரண்டாவது மாடிக்கு உணவுப் பாத்திரங்களைக் கொண்டு சென்றனர். அப்போது பாரம் தாங்காமல், லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவன் சீத்தல் தலை நசுங்கி உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் அவருடன் லிப்ட்டில் பயணம் செய்த இரண்டு இளைஞர்களும் ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இறப்பு

“திருமண மண்டபத்தில் முறையாக அனுமதி வாங்காமல் லிப்ட் பொருத்தி உள்ளதாகவும், அதிக எடை ஏற்றியும், முறையாகப் பராமரிக்காத காரணத்தாலும் விபத்து நேர்ந்துள்ளதாகவும், லிப்டில் கிரில் மற்றும் கதவுகளின்றி இருந்ததாகவும், அதுவே உயிரிழப்பு ஏற்படக் காரணம்“ என காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட மூன்று பணியாளர்களை கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் திருமண மண்டப உரிமையாளர் ஜெயப்பிரியா தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE