மனைவியை கண்டுபிடித்துத் தரவேண்டி போதை ஆசாமி ஒருவர் காவல் நிலையத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். நீண்ட நேரத்திற்குப் பின் அவர் மீட்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே காவல் துறையினரை ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
வேலூர், சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணி. இன்று மாலை வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு வந்த அவர், திடீரென அங்குள்ள மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வதாக காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் பதறியடித்துக் கொண்டு காவல்நிலையத்திலிருந்து வெளியே வந்த காவலர்கள் அவரிடம் பக்குவமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். காவலர்களிடம் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருந்ததே தவிர, அவர் மரத்திலிருந்து இறங்குவதாக இல்லை. ``என்னோட பொண்டாட்டி கிடைக்கும் வரை மரத்திலிருந்து இறங்க மாட்டேன்'' என அவர் தொடர்ந்து அடம் பிடித்துக் கொண்டே இருந்தார். இதனால் காவல் துறையினர் செய்வதறியாது விழிபிதுங்கினர். ஒரு கட்டத்தில் சோர்வடைந்த காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினரும் அந்த போதை ஆசாமியிடம் நீண்ட நேரமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, “பக்கத்து வீட்லயெல்லாம் சண்டை போட்டதால, அவங்க என்னுடைய பொண்டாட்டியையும், மகளையும் கடத்தி வச்சிருக்காங்க. அவங்கள கண்டுபுடிச்சு கொடுக்க சொன்னா, ஸ்டேஷன்ல கண்டுக்கவே மாட்டேங்கறாங்க. அதனாலதான் நான் இங்கேயே தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்“ என அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
ஒருவழியாக அவரை சமாதானப்படுத்திய காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் மரத்திலிருந்து பக்குவமாக இறங்க வைத்தனர். போதையிலிருந்த அவர் சிறிது நேரம் காவல் நிலையத்தில் உள்ளே அமர்ந்திருந்தார். போதை தெளிந்ததும் ‘புழுக்கமா இருக்கு. வெளியே உட்காரப் போகிறேன்’ எனச் சொல்லி வெளியில் வந்தவர், சிறிது நேரத்திலேயே அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இது குறித்து வேலூர் காவல் நிலையத்தினர், “தண்டபாணி அடிக்கடி குடித்து வந்து மனைவி மகளுக்கு தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் அவரின் மனைவி அவருடைய அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆனால் தண்டபாணியோ உறவினர்கள்தான் மனைவியைக் கடத்தி விட்டதாக, போதையில் அடிக்கடி தகராறு செய்து வருகிறார்” என்கிறார்கள்.