தேர்வு எழுதச் சென்ற பிளஸ் 1 மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாடியநல்லூர் காமராஜர் நகரைச் சேர்ந்த 16 வயது மாணவி தனது பெரியம்மா வீட்டில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார். அவருக்கு பெற்றோர் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தன்னைக் காப்பகத்தில் சேர்க்குமாறு செங்குன்றம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் கொடுத்தார்.
இந்த புகாரை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். மாணவியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாக்கம் அருகே உள்ள சேவாலயா காப்பகத்தில் அவரை போலீஸார் சேர்த்தனர்.
பொதுத்தேர்வு எழுதுவதற்காக பெண் காவலருடன் பள்ளிக்கு மாணவி சென்று வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி மாணவியை பெண் காவலர் தேர்வு எழுத அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், தேர்வு முடிந்ததும் மாணவி வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் காவலர், ஆசிரியர்களிடம் விசாரித்தார். அப்போது மாணவி தேர்வு எழுத பள்ளிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், மாணவியின் பெரியம்மாவை அழைத்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறினார். இதையடுத்து தலைமறைவாக இருந்த துரைமுருகனை கைது செய்த செங்குன்றம் போலீஸார், அவரை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
பள்ளிக்குச் சென்ற மாணவியை ஆசை வார்த்தைகளைக் கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று போரூரில் உள்ள கோயிலில் தாலி கட்டியுள்ளார். இதன் பல்வேறு மாவட்டங்களில் அவர்கள் சுற்றியுள்ளனர். கீரனூரில் தங்களுக்கு திருமணமாகி விட்டது என்று கூறி ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அன்றிரவு மாணவியின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக பலாத்காரத்தில் துரைமுருகன் ஈடுபட்டுள்ளார். இதனால் தன்னை மீண்டும் சென்னைக்கு அழைத்து செல்லுமாறு மாணவி வற்புறுத்தியுள்ளார். இதனால் அவரை சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டதாக துரைமுருகன் கூறியுள்ளார். மாணவியை அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துரைமுருகன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.