வீட்டிற்கு புகுந்த மர்ம நபர்... சடலமாக கிடந்த தாய், மகன்கள்: பட்டப்பகலில் நடந்த கொடூரம்

By காமதேனு

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தாய் மற்றும் இரண்டு மகன்களை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி. சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் நெருப்பெரிச்சல் அரசுப்பள்ளி வீதியில் ஒரு வீட்டில் தனது 2 மகன்கள் தர்ணீஷ் (9), நித்தீஷ் (6) ஆகியோருடன் வாடகைக்கு குடியேறினார். இன்று காலை முத்துமாரியின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனிடையே, வீட்டின் உரிமையாளர், முத்துமாரி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு தாய், மகன்கள் ரத்த வெள்ளத்தில் சடலமாக இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல் துறையினர் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த வீட்டில் மாநகர காவல் துறை ஆணையர் ஏஜி பாபு ஆய்வு செய்தார். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தாயும், இரண்டு மகன்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE